பாகிஸ்தானில், தாதா தாவூத் இப்ராகிமின் அண்ணன் மகன் கொரோனாவுக்கு பலி
பாகிஸ்தானில் தாவூத் இப்ராகிமின் அண்ணன் மகன் கொரோனாவுக்கு பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மும்பை,
மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தாவூத் இப்ராகிமின் அண்ணன் சபீர் கஸ்காரின் மகன் சிராஜ் சபீர் (வயது38) கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் சிராஜ் சபீரின் உடலை தாவூத் இப்ராகிம், தாதா அனீஸ் இப்ராகிம் மற்றும் தாவூத் இப்ராகிம் பாதுகாவலர்கள் மட்டுமே சென்று அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
சிராஜ் சபீர் உயிரிழந்த தகவல் மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிமின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதேபோல சிராஜ் சபீர் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் துபாயில் உள்ள தாவூத் இப்ராகிமிற்கு சொந்தமான கடைகள் ஒரு நாள் அடைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாவூத் இப்ராகிமின் அண்ணன் சபீர் கஸ்கார் ஏற்கனவே மும்பை பிரபாதேவியில் பதான் கும்பலால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஒரே மகன் சிராஜ் சபீர் ஆவார்.