ரூ.667 கோடிக்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க டெண்டர் எடுக்க விண்ணப்பித்த தனியார் நிறுவனத்தை நான் மிரட்டவில்லை - போலீஸ் ஐ.ஜி. ரூபா விளக்கம்

பெங்களூருவில், பெண்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.667 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரை எடுக்க விண்ணப்பித்த தனியார் நிறுவனத்தை தான் மிரட்டவில்லை என்று போலீஸ் ஐ.ஜி. ரூபா விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2020-12-26 00:39 GMT
பெங்களூரு,

கர்நாடக உள்துறை செயலாளராக இருந்து வருபவர் போலீஸ் ஐ.ஜி. ரூபா. இவர், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதன் மூலம் பிரபலமானார். இந்த நிலையில், நிர்பயா திட்டத்தின் கீழ் பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.1,067 கோடியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த திட்டங்களுக்காக முதற்கட்டமாக ரூ.667 கோடிக்கு போலீஸ் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. இதற்காக 4 நிறுவனங்கள் டெண்டர் எடுக்க விண்ணப்பித்திருந்தது. அவற்றில் மும்பையை சேர்ந்த நிறுவனமும் ஒன்றாகும். அந்த நிறுவன அதிகாரியிடம் ரூ.667 கோடி டெண்டர் விவகாரம் குறித்து போலீஸ் ஐ.ஜி. ரூபா எனக்கூறிக் ஒரு பெண் பேசியதாகவும், இ-மெயில் அனுப்பி மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியானது.

இதனால் போலீஸ் ஐ.ஜி. ரூபாவின் பெயரில் மும்பை நிறுவன அதிகாரியிடம் பேசியது யார்?, டெண்டர் விவகாரத்தில் ஏதேனும் முறைகேடு நடந்ததா? என்ற சர்ச்சை எழுந்தது. அதே நேரத்தில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களுக்கு இந்த டெண்டரை வாங்கி கொடுக்க முயற்சிப்பதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி. ரூபா நேற்று விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில் இந்த திட்டம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் ஆதாரத்துடன் போலீஸ் ஐ.ஜி.ரூபா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி. ரூபா கூறியதாவது;-

மும்பை நிறுவனத்துடன் எனது பெயரை பயன்படுத்தி இருப்பதாக கூறுவது தவறு. அந்த நிறுவனத்துடன் நானே தொடர்பு கொண்டு பேசினேன். டெண்டர் விவகாரம் தொடர்பாக இ-மெயிலும் அனுப்பி வைத்திருந்தேன். நிர்பயா திட்டத்தின் கீழ் பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு ரூ.1,067 கோடியில் புதிய திட்டங்களுக்கான டெண்டரை கோரியது. முதற்கட்டமாக ரூ.667 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது. இதற்காக விண்ணப்பித்திருந்த ஒரு பெரிய நிறுவனம், விண்ணப்பத்தில் பல தவறான தகவல்களை குறிப்பிட்டு அனுப்பி வைத்திருந்தது. முதற்கட்டமாக அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது.

2-வது முறையாகவும் அதே நிறுவனம் டெண்டர் கோரி இருந்தது. இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்திற்கு உரிய விளக்கம் அளிக்கவும், அந்த நிறுவனத்திடம் பேசினேன். ஒரு பெரிய நிறுவனம் முதற்கட்ட விண்ணப்பத்தையே தவறாக அனுப்பியதால், அந்த நிறுவனம் இந்த திட்டத்தை முழுவதுமாக எப்படி செயல்படுத்தும் என்ற காரணத்திற்காக, அந்த நிறுவனத்திடம் பேசினேன். விளக்கம் கேட்டு இ-மெயில் அனுப்பப்பட்டது. இந்த திட்டத்தில் எந்த முறைகேடும் நடக்க கூடாது, ஊழல் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே நான் முழு முயற்சி எடுத்தேன். டெண்டர் எடுக்கும் நிறுவனத்தை நான் மிரட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்