கேக்கில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டல் - வாலிபர் கைது
பெங்களூருவில் கேக்கில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
மண்டியா மாவட்டம் மலவள்ளியை சேர்ந்தவர் சாகர்கவுடா. இவர், ஆன்லைன் மூலமாக உணவு வகைகளை வீடு, வீடாக சென்று வழங்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், பிறந்தநாள் விழாவில் ஒன்றில் இளம்பெண் ஒருவருடன் சாகர்கவுடாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த இளம்பெண் வேலையில்லாமல் இருந்துள்ளார். இதுபற்றி சாகர்கவுடாவிடம் அவர் தெரிவித்துள்ளார். உடனே அவர், தான் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
பின்னர் தனது அண்ணன் மகனின் பிறந்தநாள் இருப்பதாக கூறி வீட்டுக்கு வரும்படி இளம்பெண்ணை சாகர்கவுடா அழைத்துள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணுக்கு கேக் கொடுத்துள்ளார். அந்த கேக்கை சாப்பிட்ட இளம்பெண் மயக்கம் அடைந்துள்ளார். முன்னதாக அந்த கேக்கில் சாகர்கவுடா மயக்க மருந்து கலந்திருந்ததாக தெரிகிறது. பின்னர் இளம்பெண்ணை சாகர்கவுடா கற்பழித்ததாகவும், அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்கும்படியும் இளம்பெண்ணை சாகர்கவுடா மிரட்டியுள்ளார். அதன்பிறகு, போலீசாரிடம் புகார் அளிக்க போவதாக சாகர்கவுடாவிடம் இளம்பெண் கூறியுள்ளார். உடனே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சாகர்கவுடா, அவரது குடும்பத்தினர் கூறி நாடகமாடியுள்ளனர். அத்துடன் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததுடன், ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக கூறி சாகர்கவுடா மிரட்டியுள்ளார்.
இதுபற்றி சந்திரா லே-அவுட் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சாகர்கவுடாவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.