புளியந்தோப்பு பகுதியில் வாகனங்களில் பொருத்தப்பட்ட பம்பர்கள் அகற்றம் - வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி
புளியந்தோப்பு பகுதியில் வாகனங்களில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட கூடுதல் பம்பர்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அகற்றினர்.
திரு.வி.க. நகர்,
மினி சரக்கு வாகனங்கள் மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் கார்களில், விபத்தில் சிக்கினால் அதிக சேதம் ஏற்படாமல் பாதுகாக்க கூடுதல் பம்பர்களை பொருத்துகின்றனர். இதனால் வாகனங்களில் உள்ள சென்சார் வேலை செய்யாததால் விபத்து காலங்களில் அந்த வாகனங்களில் உள்ள ஏர் பலூன் வேலை செய்யாமல் போவதால் உள்ளே பயணிப்போருக்கு பாதுகாப்பு இல்லாமல் உயிர் பலி ஏற்படுகிறது.
அத்துடன் கூடுதல் பம்பர் பொருத்தப்பட்ட வாகனத்தில் மோதும் வாகனங்களுக்கு அதிக சேதம் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க வாகனத்தில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை ஐகோர்ட்டு உத்தரவின்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
அதன்படி சென்னை கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் முன்னிலையில் புளியந்தோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அந்த வழியாக சென்ற 16 கார்களின் முன்புறம் கூடுதலாக பொருத்தப்பட்டு இருந்த பம்பர்களை அகற்றினர்.
அதேபோல் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் பக்கவாட்டில் வைக்க வேண்டிய கண்ணாடிகளை, உள்புறமாக வைத்து இருப்பதை அறிந்து, அவற்றை வெளியே வைக்க உத்தரவிட்டதுடன், பின்னால் அமர்ந்துள்ள பயணிகளை பார்க்கும் வகையில் ஆட்டோவின் உள்ளே வைக்கப்பட்டு இருந்த முகம் பார்க்கும் கண்ணாடிகளையும் அகற்றினர்.