சென்னையில், புத்தாண்டு நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது - போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

சென்னையில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டி செல்பவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்படுவார்கள் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

Update: 2020-12-25 23:17 GMT
சென்னை,

சென்னையில் கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.

குறிப்பாக குடிபோதையில் வாகனங்களில் சென்று ரகளையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். அதே நேரத்தில் குடும்பத்துடன் தேவாலயங்களுக்கு செல்பவர்கள், கோவில்களுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னையில் வரும் புத்தாண்டு நள்ளிரவு வரை சாலைகளில் இப்போதிருந்தே இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவர போலீஸ் கமி‌‌ஷனர் மகே‌‌ஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமி‌‌ஷனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில், இணை கமி‌‌ஷனர்கள் பாலகிரு‌‌ஷ்ணன், சுதாகர், பாண்டியன், லட்சுமி, துணை கமி‌‌ஷனர்கள் செந்தில்குமார், அசோக்குமார், குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு சாலைகளில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதிவேகமாக, அபாயகரமாக வாகனங்களை ஓட்டிச்சென்ற ரோமியோக்களை சென்னை முழுவதும் போலீசார் வேட்டையாடி பிடித்தனர். அதிவேகமாக வாகனங்களில் சென்ற 175 பேரும், அபாயகரமாக வாகனங்களில் சென்ற 50 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்