பால் உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடையாமல் தடுக்க அரசு நிதி வழங்குகிறது குளிர்விப்பு மைய திறப்பு விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

பால் உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடையாமல் தடுக்க அரசு நிதி வழங்கி வருகிறது என்று குளிர்விப்பு மைய திறப்பு விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

Update: 2020-12-25 16:49 GMT
தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம், ஜம்மனஅள்ளி, தம்பிசெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் ரூ.25 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தொகுப்பு குளிர்விப்பு மையங்கள், லளிகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க புதிய கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பால் குளிர்விப்பு மையங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் பிரதாப், தணிகாசலம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் யசோதா மதிவாணன், ஆவின் பொதுமேலாளர் உத்திரகுமார், ஒன்றியக்குழு தலைவர்கள் நீலாபுரம் செல்வம், பொன்மலர் பசுபதி, மாவட்ட அரசு வக்கீல் பசுபதி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் பழனிசாமி, ஆறுமுகம், மகாலிங்கம், அங்குராஜ் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

இந்தப் பகுதியில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் நிறுவப்படுவதால் சங்கத்தில் கொள்முதல் செய்யும் பாலின் காப்புத்தன்மை அதிகரிக்கும். தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு பால் வழித்தட போக்குவரத்து செலவு கணிசமாக குறையும். ஒரு லிட்டர் பாலை சேகரித்து சென்னைக்கு அனுப்பி நேரடியாக விற்கும்போது ஆவினுக்கு லாபம் கிடைக்கிறது. அதேநேரம் உபரி பாலை பால் பவுடராக தயாரித்தால் ஒரு லிட்டருக்கு ரூ.8 வரை இழப்பு ஏற்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் பால் உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடையாமல் தடுக்க தமிழக அரசு நிதி வழங்கி வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் தேவை மற்றும் சூழலுக்கு ஏற்ப கொள்முதல் செய்வது, விலை வழங்குவது ஆகியவற்றை வழக்கமாக கொண்டுள்ளன. ஆனால் ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பாலை எந்த காலத்திலும் மறுக்காமல் முழுமையாக பெற்றுக் கொள்கின்றன. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

மேலும் செய்திகள்