மருதேப்பள்ளியில் மகளிருக்கு விலையில்லா நாட்டு கோழிக்குஞ்சுகள் - கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்
மருதேப்பள்ளியில் மகளிருக்கு விலையில்லா நாட்டு கோழிக்குஞ்சுகளை கலெக்டர் ெஜயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
பர்கூர்,
பர்கூர் ஒன்றியம் ஒரப்பம் ஊராட்சி மருதேப்பள்ளியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் விலையில்லா அசில் இன நாட்டு கோழி குஞ்சுகள் மகளிருக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி விலையில்லா நாட்டு கோழி குஞ்சுகளை மகளிருக்கு வழங்கினார். பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி, ஓசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம், மத்தூர், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம் ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் 4 ஆயிரம் மகளிருக்கு விலையில்லா அசில் இன நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக மருதேப்பள்ளியில் தலா 25 விலையில்லா அசில் இன நாட்டு கோழிகுஞ்சுகள் 6 ஊராட்சிகளை சேர்ந்த 400 மகளிருக்கு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் விலையில்லா அசில் இன நாட்டு கோழி குஞ்சுகள் 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. 2-ம் கட்டத்தில் மீதமுள்ள ஓசூர், சூளகிரி, தளி மற்றும் கெலமங்கலம் ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த மகளிர்களுக்கு வழங்கப்படும். விலையில்லா அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகளை பெறும் பெண்கள் அவற்றை வளர்த்து பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் குமரவேல், துணை இயக்குனர் (பொறுப்பு) மரியசுந்தரம், உதவி இயக்குனர்கள் முரளி சந்தானம், அருள்ராஜ், கால்நடை மருத்துவர்கள் சிவசங்கர், மற்றும் சரவணக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.