ஹைவேவிஸ் மலைப் பகுதியில் மீண்டும் யானை அட்டகாசம்: தும்பிக்கையால் தூக்கி வீசியதில் தோட்ட தொழிலாளி பரிதாப சாவு

ஹைவேவிஸ் மலைப் பகுதியில் காட்டுயானை தும்பிக்கையால் தூக்கி வீசியதில் தோட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2020-12-25 11:27 GMT
சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்தவர் முத்தையா (வயது 55). இவர் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் உள்ள மேல்மணலாறு பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அங்குள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் அவர் தொழிலாளியாக வேலை பார்த்தார். தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பில் அவர் வசித்து வந்தார்.

இந்த குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை வந்து அங்கிருந்த பொருட்களையும் மரங்களையும் சேதப்படுத்தி சென்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த குடியிருப்புக்கு ஆண் காட்டு யானை ஒன்று வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. வீடுகளுக்கு வெளியே வைக்கப்பட்ட பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதோடு ஒவ்வொரு வீடாகச் சென்று கதவுகளை தட்டியது.

இந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த முத்தையா கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது அந்த காட்டு யானை, முத்தையாவை தும்பிக்கையால் தூக்கி வீட்டுக்கு வெளியே வீசியது. பின்னர் அவருடைய வயிற்றில் தந்தத்தால் குத்தி கொன்றது. இதில் குடல் சரிந்த நிலையில் முத்தையா பிணமானார். அக்கம் பக்கம் வீட்டில் உள்ள மக்கள் இந்த காட்சிகளை ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்று விட்டது. இதுகுறித்து வனத்துறை, போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

முத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது வனத்துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த யானை தொடர்ந்து சில நாட்களாக இப்பகுதியில் உலா வருவதாக தெரிவித்தும் வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லின் துக்காராம் அங்கு வந்தார். அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு காட்டு யானையிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயிரிழந்த முத்தையாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து யானை தாக்கி உயிரிழந்த முத்தையாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும், காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து முத்தையாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஹைவேவிஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் கடந்த 15-ந்தேதி அமாவாசை என்ற கூலித்தொழிலாளியும் காட்டு யானை தந்தத்தால் குத்தியதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதே போன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்