"ஊழலுக்காக ஆட்சியை இழந்ததை மறந்து விட்டு மு.க.ஸ்டாலின் பேசுகிறார்"; ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி
திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கருத்தகண்ணன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், பகுதி அணி செயலாளர்கள் நெல்லையப்பபுரம் மணி, ஜெயக்குமார், ஜெயமுருகன், துணைச் செயலாளர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் லட்சுமிபதிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள எம்.ஜிஆர். சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். உறுதிமொழி ஏற்பு நிகழ்த்தினார். அன்னதானம், அமைதி பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண் விற்பனை குழு முன்னாள் தலைவர் பூமிபாலன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் ஓ.எம்.கே.சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில துணை செயலாளர் கோ.பாரி, மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் அம்பலம், மாணவரணி மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட துணைசெயலாளர் புருஷோத்தம்மன், கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், மாவட்ட துணைச்செயலாளர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் சாக்கிலிப்பட்டி, பாலமுருகன், வட்ட செயலாளர்கள் பொன்முருகன், திருநகர் பாலமுருகன், கர்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியின்போது கூறிய தாவது:- முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை செய்கிறேன் என்று கூறுவது அவரது சொந்தக் கருத்து. மு.க. ஸ்டாலின் சுயநலத்திற்காக கவர்னரை சந்திக்கிறார். அவருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்து விட்டது.இந்திய துணைக்கண்டத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு என்பதை மு.க. ஸ்டாலின் மறந்துவிட்டு ஊழலை பற்றி பேசுகிறார். யாராவது கூட்டணியில் சேர்க்க மாட்டார்களா? என்று கமல்ஹாசன் அலைபாய்கிறார். எந்த ஒரு நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே வாழ்விலும், திரைப்படத்துறையிலும் நல்லவராக வல்லவராக இருந்தார் என்பது நாடறிந்த உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.