மருத்துவ கழிவுகள் தீப்பிடித்து எரிந்ததால் புகை மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
மருத்துவ கழிவுகள் தீப்பிடித்து எரிந்ததால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளானார்கள்.
பூந்தமல்லி,
தாம்பரம்மதுரவாயல் பைபாஸ் சாலையையொட்டி உள்ள வானகரம் சர்வீஸ் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சிலர் குப்பைகளுடன் மருத்துவ கழிவுகளையும் கொட்டிச் சென்று விடுகின்றனர். இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவுப்பு பலகை வைத்தும் பலனில்லை.
அவ்வப்போது மாநகராட்சி மற்றும் வானகரம் ஊராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றி வந்தனர். நேற்று மதியம் இந்த பகுதியில் குப்பைகளுடன் மருத்துவ கழிவுகளை கொட்டிய சமூக விரோதிகள் சிலர் அதனை தீ வைத்தும் எரித்தனர். இதனால் குப்பை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் கரும்புகை மூட்டம் எழுந்தது. மருத்துவ கழிவுகள் என்பதால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் ஒரு மணி நேரமாக எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
இந்த இடங்களில் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.