மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க மாற்று இடம் - மந்திரி ஏக்நாத் ஷிண்டே தகவல்

மும்பையில் மெட்ரோ பணிமனை அமைக்க மாற்று இடத்தை தேடி வருவதாக மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

Update: 2020-12-24 21:45 GMT
மும்பை,

மும்பையில் கொலபா- பாந்திரா- சீப்ஸ் இடையே 3-வது மெட்ரோ திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஆரேகாலனியில் பணிமனை அமைக்கும் பணியை முந்தைய பா.ஜனதா அரசு தொடங்கி இருந்தது. ஆனால் இந்த திட்டத்தால் ஆரேகாலனி வனப்பகுதி அழியும் என கூறி மெட்ரோ பணிமனையை அங்கு இருந்து காஞ்சூர்மார்க்கிற்கு உத்தவ் தாக்கரே அரசு மாற்றியது.

இந்தநிலையில் காஞ்சூர்மார்க் நிலம் தங்களுக்கு சொந்தமானது என மத்திய அரசு உரிமைகோரியது. மேலும் காஞ்சூர்மார்க்கில் மெட்ரோ பணிமனையை அமைக்க மும்பை ஐகோர்ட்டு தடைவிதித்து உள்ளது.

இந்தநிலையில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க மாற்று இடத்தை தேடி வருவதாக நகர மேம்பாட்டு துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

பணிமனை இடப்பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் தீர்த்துவிட்டால் மெட்ரோ ரெயில் திட்டம் சரியான நேரத்தில் முடிக்கப்படும். எனினும் மத்திய அரசு தரப்பில் மெட்ரோ ரெயில் திட்டத்தை முடிக்க மாநில அரசுக்கு உதவி செய்வதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. எனவே மாநில அரசு மாற்று இடத்தை தேடி வருகிறது. காஞ்சூர்மார்க்கில் சுமார் 40 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. அங்கு மெட்ரோ 3, 4 திட்டங்களுக்கான பணிமனை, அம்பர்நாத் மற்றும் பத்லாப்பூர் ரெயில்களுக்கான சந்திப்பு பகுதியை அமைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்