ஓடும் லாரியில் இருந்து அவிழ்ந்து விழுந்தது: கயிறு இறுக்கி சாலையில் நடந்து சென்ற டிரைவர் சாவு - சிதம்பரத்தில் பரிதாபம்
ஓடும் லாரியில் இருந்து அவிழ்ந்து விழுந்ததில் சாலையில் நடந்து சென்ற டிரைவரின் கழுத்தை இறுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
சிதம்பரம்,
சிதம்பரம் அடுத்த புதுபூலாமேடு பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன் (வயது 48). இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அன்புச்செல்வன் குமராட்சி சிதம்பரம் மெயின் ரோட்டிலிருந்து புதுபூலாமேடு பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது குமராட்சி இருந்து சிதம்பரம் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியில் பின்னால் இருந்த நைலான் கயிறு அவிழ்ந்து அன்புச்செல்வன் கழுத்தில் மீது விழுந்து சிக்கிக்கொண்டது.
அதில் இருந்து மீண்டு வர அவர் முயன்றும், அவரால் முடியவில்லை. சுமார் 100 மீட்டர் தூரம் வரைக்கும் அவரை லாரி இழுத்து சென்றது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பார்த்து, லாரியை ஓட்டி சென்ற டிரைவரிடம், ஒருவர் கழுத்தில் கயிறு மாட்டி இருப்பதை கூறியுள்ளனர். உடன் அவர் லாரியை நிறுத்தினார். ஆனால் அன்புசெல்வன் கழுத்து நெரிந்து துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.
தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பக்டர் விஜி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் லாரியை பறிமுதல் செய்துடன், அன்புசெல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.