ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததால் சீறிப்பாய தயாராகும் காளைகள் பயிற்சி களத்தில் மாடுபிடி வீரர்கள்

அரசு அனுமதி கிடைத்ததால் ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய தயாராகி வருகின்றன. மாடுபிடிவீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

Update: 2020-12-24 00:31 GMT
கறம்பக்குடி,

தமிழர்களின் அடையாளமாகவும், கலாசார பெருமைமிக்கதுமான, ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை மாதம் தொடங்கி வைகாசி மாதம் வரை பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாக்களை காண வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பயணிகள் தமிழகம் வந்து செல்கின்றனர்.

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு உலக பிரசித்திபெற்ற விழாவாக நடத்தபடுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு பொங்கல் ஜல்லிக்கட்டு நடத்தபடுமா? என்ற சந்தேகம் இருந்தது. தற்போது ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் காளை வளர்ப்போரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பயிற்சி

இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். கறம்பக்குடி தாலுகாவில் கருக்கா குறிச்சி, முள்ளங்குறிச்சி, மழையூர், வெட்டன் விடுதி, பிலாவிடுதி, கறம்பக்குடி, காட்டாத்தி, ரெகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுகாளைகள் வளர்ப்போர் அதிக அளவில் உள்ளனர். தற்போது இப்பகுதியில் உள்ள காளைகள் ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தப்பட்டு வருகின்றன. காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, பாய்ச்சல் பயிற்சி, ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாடுபிடி வீரர்களும் பயிற்சி களத்தில் உள்ளனர்.

இதுகுறித்து கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைவளர்ப்பவர் கூறும்போது, இந்த ஆண்டு கொரோனாவால் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்தில் இருந்தோம். தற்போது அரசு அனுமதி வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார் படுத்தும் பணியை உடனே தொடங்கிவிட்டோம் என்றார்.

அன்னவாசல்

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து அன்னவாசல், பரம்பூர் மெய்வழிச்சாலை உள்ளிட்ட பகுதியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்