வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் மனு
வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
வண்டலூர்,
தமிழக அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி இந்த மாதம் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை சென்னையில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 14-ந்தேதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மனு அளித்து அறப்போராட்டத்தில் ஈடு்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பா.ம.க. மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் இளந்தோப்பு வாசு, நிர்வாகிகள் காயரம்பேடு தேவராஜ், கணபதி, குமார், முருகன், அண்ணாமாலை ஆகியோர் முன்னிலையில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த மகளிரணி, இளைஞரணி, மாணவரணியை சேர்ந்த ஏராளமானோர் சிலம்பாட்டம் மற்றும் வன்னியர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தியவாறு நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.
பின்னர் இடஒதுக்கீடு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த 1,851 பேர் கையேழுத்து போட்ட இடஒதுக்கீடு கோரிக்கை மனுவை நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமாரிடம் வழங்கினார்கள்.
இதனை பெற்றுகொண்ட செயல் அலுவலர் மனுவை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோவிலில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரை மனு கொடுக்க ஊர்வலமாக சென்றனர். இதற்கு மாமல்லபுரம் நகர செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் கணேசமூர்த்தி, திருக்கழுக்குன்றம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பி.வி.கே.வாசு முன்னிலை வகித்தனர்.
கோரிக்கை மனு கொடுக்கும் ஊர்வலத்தில் பா.ம.க.வை சேர்ந்த 2 பேர் தெருக்கூத்து கலைஞர் வேடம் அணிந்து வன்னியர் புராணம் நாடகம் மூலம் நடித்து தனி இட ஒதுக்கிடு கோரி நூதன முறையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பாடல்கள் மூலம் நடித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி அலுவலகம் முன்பு கோஷமிட்ட அவர்கள் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் தனி இட ஒதுக்கிடு கோரி கோரிக்கை மனு வழங்கினர். இதில் பா.ம.க. நகர நிர்வாகிகள் எம்.ஆர். சீனிவாசன், எம்.பி.தயாளன், எம்.ஆனந்தன், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் ஜீவா, கடம்பாடி ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டலத்தில் இட ஒதுக்கீடு கேட்டு பாம.க. சார்பில் மனு வழங்கப்பட்டது. இதில் சோழிங்கநல்லூரை சேர்ந்த மோகன சுந்தரம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை செயலாளர் எஸ். எம். நிர்மல்குமார், பகுதி செயலாளர்கள் ரகு, சீனிவாசன், சக்கரபாணி மோகன்ராம், உதயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் வன்னியர் சங்கத்தினர் பஜாரில் இருந்து பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்திற்கு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் .ராஜசேகர் தலைமை வகித்தார், மாநில பா.ம.க செயற்குழு உறுப்பினர் குமரவேல், அச்சரப்பாக்கம் நகர செயலாளர் முருகன், கண்ணன், .மூர்த்தி, பக்கிரிசாமி, சரவணன், பானுமதி பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருங்குழி பேரூராட்சி அலுவலகம் எதிரே பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பொன் கங்காதரன் தலைமையில் கருங்குழி பேரூராட்சி செயலாளர் சிவராமகிருஷ்ணன் முன்னிலையில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி கருங்குழி பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் செய்து பேரூராட்சி செயல் அலுவலர் கேசவனிடம் மனு கொடுத்தனர்.
இதில் சபரி சந்தோஷ், ராஜா, மகேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் இடைக்கழி நாடு பேரூராட்சியில் பா.ம.க. சிறப்பு மாவட்டசெயலாளர் கணபதி தலைமையில் பேரூர் செயலாளர் உதயகுமார் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகம் எதிரே வன்னியர்களுக்கு 20 சதவீத உதவி கோரி ஆர்ப்பாட்டம் செய்து பின்னர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தா ஜெயலட்சுமியிடம் மனு அளித்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பாலசுப்பிரமணியசாமி கோவில் முன்பாக இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பா.ம.க.வினர் உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக கூடி 20 சதவிகித இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு அளிக்க வேண்டுமென கோரி கோஷங்கள் எழுப்பினர். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் மகேஷ் தலைமையில் மாநில கொள்கை விளக்க அணி தலைவர் விசுவநாதன் கண்டன உரையாற்றினார்.
பின்னர் உத்திரமேரூர் செயல் அலுவலர் லதாவிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ் அய்யனார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.