வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

Update: 2020-12-23 05:32 GMT
வேலூர்,

வேலூர் மாநகராட்சி பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், கோட்டையை அழகுப்படுத்தும் பணி, சதுப்பேரியில் குப்பைகள் தரம் பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதற்கட்டமாக அவர் ரூ.33 கோடியில் கோட்டை அழகுப்படுத்தும் பணியை பார்வையிட்டார்.

அப்போது அங்கு அமைக்கப்பட்டு வரும் நடைபாதை மற்றும் கோட்டை அகழி தூர்வாரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நடைபாதையின் நீளம் மற்றும் அகலம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டப்படி உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து அம்மணாங்குட்டை பகுதியில் ரூ.2 கோடியில் அமைக்கப்படும் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகளையும், ஓட்டேரியில் உள்ள பூங்கா, ஏரிக்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, குடிநீர் கிணறுகளை ஆய்வு செய்தார். பின்னர் சதுப்பேரியில் குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதையும், சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் மற்றும் அம்பேத்கர் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், வேலூர் கோட்டையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அனைத்து வகையான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படும். அவற்றின் அறிவியல் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்படும். இது கோட்டைக்கு வரும் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் இங்கு காவலர்களுக்கான தங்கும் விடுதி அமைக்க பரிசீலனை செய்து வருகிறோம்.

தொல்லியல்துறை சார்பில் ரூ.4½கோடியில் டெண்டர் விடப்பட்ட சிற்றுண்டி உணவகம், நவீன கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கும்படி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன், பொறியாளர் சீனிவாசன், நகர்நல அலுவலர் சித்ரசேனா, உதவிகமிஷனர் செந்தில்குமார், தாசில்தார் ரமேஷ், தொல்லியல்துறை அலுவலர் ஈஸ்வர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்