பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை போக்கு வரத்துக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-12-23 00:50 GMT
புதுச்சேரி,

புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழகத்தில் சுமார் 240 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் இல்லாவிட்டால் தினக்கூலி ஊழியர்களாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று அவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடித்தது. அவர்கள் அனைவரும் புதுவையில் உள்ள சாலைப்போக்குவரத்து கழக பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்களின் இந்த போராட்டம் காரணமாக நேற்று புதுவை பகுதியில் இயக்கப்பட வேண்டிய 30 டவுண் பஸ்கள் இயக்கப்படவில்லை. அவை அனைத்தும் பணிமனை வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் இயங்காததால் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.

இதேபோல் காரைக்கால் பிரிவு போக்குவரத்துக் கழக பணிமனையில் நேற்று முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது இவர்களின் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்