கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு
புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த 2 மாதங்களாக தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிந்தன்பேட்டையை சேர்ந்த 73 வயது முதியவரும், ஜிப்மரில் சேலியமேட்டை சேர்ந்த 58 வயது பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 58 ஆயிரத்து 50 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 945 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது.
37 ஆயிரத்து 811 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் 187 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 173 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 629 பேர் உயிரிழந்துள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.66 சதவீதமாகவும், குணமடைவது 97.38 சதவீதமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.