கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-22 02:34 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சிவகாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ., இன்பசேகரன் எம்.எல்.ஏ., செந்தில்குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. வேடம்மாள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

சிலிண்டருக்கு மாலை

தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜேஸ்வரி, பூங்கொடி, மணிமேகலை மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்