சென்னை மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில், வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம்
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், தனது வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
அதற்கு உதவி பொறியாளா் ரமேஷ், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்கப்படும் என கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுபற்றி சட்ட பஞ்சாயத்து அமைப்பிடம் தெரிவித்தார்.
பின்னர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் இதுதொடர்பாக எழுத்து மூலமாக புகார் அளித்தார்.
ரசாயன பொடி
லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு லவக்குமார் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், மின்வாரிய அதிகாரியை கையும், களவுமாக பிடிப்பதற்காக சுப்பிரமணியிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சுப்பிரமணி, மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் உதவியாளர் சீனிவாசன் ஆகியோரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.
மின்வாரிய அதிகாரி கைது
அந்த பணத்தை இருவரும் கையில் வாங்கியதும், அங்கு மறைத்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று இருவரையும் கையும், களவுமாக பிடித்தனா். மேலும் மின்வாரிய அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதனால் மின்வாரிய அலுவலக கதவுகள் மூடப்பட்டதால் மின்கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சுமார் 6 மணி நேர சோதனைக்கு பிறகு, வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் சீனிவாசன் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.