பொங்கலூரில் அம்மா மினி கிளினிக் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

பொங்கலூர் அம்மா மினி கிளினிக்கை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

Update: 2020-12-21 05:18 GMT
பொங்கலூர்,

பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்தொழுவு, பொள்ளிக்காளிபாளையம் மற்றும் கணபதிபாளையம் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அம்மா மினி கிளினிக்கை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, தாராபுரம், மூலனூர், வெள்ளகோவில், மடத்துக்குளம், உடுமலை, ஊத்துக்குளி, பல்லடம், பொங்கலூர், திருப்பூர், திருப்பூர் மாநகராட்சி பகுதிகள், குடிமங்கலம் மற்றும் காங்கேயம் ஆகிய பகுதிகளில் முதல் கட்டமாக முதல்-அமைச்சரின் 21 அம்மா மினி கிளினிக் செயல்பட உள்ளது. இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவமனை பணியாளர் பணியில் இருப்பார்கள்.

ஊரகப் பகுதிகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்பட உள்ளது. நகர்ப்புற பகுதிகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். மேலும் இந்த மையத்தில் சர்க்கரை அளவு, சளி பரிசோதனை, சிறுகாயங்கள், சளி காய்ச்சல், வயிற்றுப்போக்கு, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர்களுக்கான சிகிச்சை மற்றும் நோய்களுக்கான மருந்துகளும் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவின்போது 18 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ் குமார், ஆர்.டி.ஓ.ஜெகநாதன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, பொங்கலூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவாசலம், கூட்டுறவு வங்கி தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி, சொக்கப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவிச்சந்திரன் (பெருந்தொழுவு), ரேவதி கனகராஜ் (உகாயனூர்), அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் யு.எஸ் பழனிசாமி, காட்டூர் சிவபிரகாஷ், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு கோகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்