தேன்கனிக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வீட்டில் பணம் திருட்டு

தேன்கனிக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வீட்டில் பணம்,மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.

Update: 2020-12-21 02:19 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி ராஜாஜி நகரை சேர்ந்தவர் முனிசாமி. ஓய்வு பெற்ற வனச்சரக அதிகாரி. இவருக்கு சொந்தமான பண்ணை வீடு தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் உள்ளது. இவர் அந்த பண்ணை வீட்டிற்கு வாரத்திற்கு 3 நாட்கள் வந்து சென்றுள்ளார். நேற்று முனிசாமி பண்ணை வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டுகள் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சிடைந்தார். இதனையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.23 ஆயிரம் மற்றும் வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

போலீஸ் வலைவீச்சு

மேலும் பண்ணை வீட்டின் ஜன்னல்கள் மற்றும் அருகில் இருந்த மோட்டார் பம்புசெட்டின் மேற்கூரைகள், கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன. மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்