பிப்ரவரி முதல் நவம்பர் வரை கர்நாடகத்தில் 188 மைனர் பெண்களுக்கு திருமணம் அதிர்ச்சி தகவல்

பிப்ரவரி முதல் நவம்பர் மாதம் வரை கர்நாடகத்தில் 188 மைனர் பெண்களுக்கு திருமணம் நடந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2020-12-20 23:32 GMT
பெங்களூரு, 

மத்திய அரசு பெண்களின் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து உள்ளது. இந்த வயது வரம்பை 21 ஆக மாற்ற மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் திருமண வயதை பூர்த்தி அடையும் முன்பே அதாவது 18 வயதுக்குள்ளேயே பெண்களுக்கு குழந்தை திருமணம் அரங்கேறி வருகிறது.

இதனை தடுக்க குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் எவ்வளவு தான் விளக்கி கூறினாலும், பெற்றோர் கண்டுகொள்வது இல்லை. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடந்த நவம்பர் வரை 188 மைனர் பெண்களுக்கு குழந்தை திருமணம் நடந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குனர் பேட்டபய்யா கூறுகையில், கர்நாடகத்தில் குழந்தைகள் திருமணத்தை தடுக்க அதிகாரிகள், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் எங்கள் கண்களையும் தப்பி குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடந்த நவம்பர் வரை 188 மைனர் பெண்களுக்கு குழந்தை திருமணம் நடந்து உள்ளது. இந்த காலக்கட்டத்தில் எங்கள் அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு 2,074 குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர். பிப்ரவரி முதல் நவம்பர் வரை ஹாசனில் 26, மண்டியாவில் 25, மைசூருவில் 24, பெலகாவியில் 19, ராமநகரில் 13 என 188 மைனர் பெண்களுக்கு திருமணம் நடந்து உள்ளது. ஹாசனில் 7, மண்டியாவில் 7, மைசூருவில் 23, பெலகாவியில் 5, ராமநகரில் 8 என 108 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதுமாதிரியான திருமணங் களை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர் தான் நடத்துகின்றனர். குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து இன்னும் அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

மேலும் செய்திகள்