கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் நடந்த திருட்டில் திருப்பம் நண்பரின் தோழியை பிடித்து போலீஸ் விசாரணை என்ஜினீயரே கொடுத்ததாக குற்றச்சாட்டு

கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து நண்பரின் தோழியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அந்த பெண் தான் திருடவில்லை என்றும், கம்ப்யூட்டர் என்ஜினீயர்தான் தன்னிடம் நகைகள் மற்றும் பணத்தை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2020-12-20 23:27 GMT
பெங்களூரு, 

பெங்களூரு கக்கலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உத்தரஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் தனஞ்செயா, கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். தனஞ்செயா மனைவியின் சொந்த ஊர் உத்தரபிரதேசம் ஆகும். தனஞ்செயாவின் மனைவி தனது சகோதரனுக்கு திருமணம் நடைபெற்றதால், கடந்த மாதம் (நவம்பர்) இறுதியில் உத்தரபிரதேசத்திற்கு சென்றிருந்தார். பின்னர் கடந்த மாதம் 12-ந் தேதி அவர் பெங்களூருவுக்கு திரும்பி இருந்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.27 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், கணவர் தனஞ்செயாவிடம் கேட்டபோது நகைகள், பணத்தை யாரோ திருடி சென்று விட்டதாக கூறினார்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து கக்கலிபுரா போலீஸ் நிலையத்தில் தனஞ்செயா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தனஞ்செயா வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொள்ள, அவரது தோழியான அர்பிதா வந்திருந்ததும், அவர் தான் நகைகள், பணத்தை திருடி சென்றிருந்ததும் தெரியவந்தது. ஆனால் மனைவிக்கு, தோழி அர்பிதா வந்தது பற்றி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக திருட்டு நடந்திருப்பதாக தனஞ்செயா கூறியது தெரியவந்தது. இந்த நிலையில், திருட்டு சம்பவம் தொடர்பாக அர்பிதாவை பிடித்து போலீசார் விசாரித்த போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அதாவது தனஞ்செயா தனது மனைவி சொந்த ஊருக்கு சென்றிருப்பதால் கடந்த 10-ந் தேதி தன்னுடைய நண்பரை அழைத்து தான் வீட்டில் தனியாக இருப்பதாகவும், யாரையாவது வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். அதன்படி, தனஞ்செயாவின் நண்பர், தனது தோழியான அர்பிதாவை தனஞ்செயா வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அர்பிதாவும் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். இதனால் தனஞ்செயா வீட்டுக்கு சென்ற அர்பிதாவுடன் தனஞ்செயாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வைத்து 2 பேரும் மதுஅருந்தி உள்ளனர். பின்னர் அர்பிதா வாடகை காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் தனது வீட்டில் இருந்த நகைகள், பணத்தை அர்பிதா திருடி சென்று விட்டதாக தனஞ்செயா போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் தான் அந்த நகைகள், பணத்தை திருடி செல்லவில்லை, தனஞ்செயா தான் அவற்றை வைத்து கொள்ளும்படி தன்னிடம் கொடுத்ததாக அர்பிதா போலீசாரிடம் கூறியுள்ளார். இதனால் அர்பிதா திருட்டில் ஈடுபட்டாரா? அல்லது தனஞ்செயா கொடுத்து அனுப்பினாரா? என்பது தெரியாமல் உள்ளது. இதுதொடர்பாக தனஞ்செயா மற்றும் அர்பிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அர்பிதாவிடம் இருந்த நகைகள், பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்