அரசு பள்ளிகளில், மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் தொடக்கம்

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2020-12-20 13:47 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவை இணைந்து தர்மபுரி மாவட்டத்தை பசுமையாக மாற்றும் நோக்கத்தில் அரசு பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, பாலக்கோடு, அரூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் ஒரு கல்வி மாவட்டத்திற்கு தலா 5 அரசு பள்ளிகள் என மொத்தம் 15 அரசு பள்ளி தேர்வு செய்யப்பட்டு மரக்கன்று வழங்கும் விழா பாலவாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி வாழ்த்தி பேசினார்.மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் சாமுவேல் 15 அரசுப் பள்ளிகளுக்கும் பச்சை நிற வலை, மரக்கன்றுகள் வளர்ப்பதற்கான 1000 விதைப்பைகள் மற்றும் விதைகளை வழங்கினார். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு அரசு பள்ளியும் அடுத்த 3 மாதங்களில் 1000 மரக்கன்றுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இந்த திட்டமானது விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் பாலவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுகன்யா மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டபணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அங்கு மரக்கன்றுகள் வளர்க்கும் தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம், மாடி தோட்டம் ஆகிய பசுமை பணிகளை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். விழாவில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், பள்ளியின் தலைமையாசிரியர் சிவமூர்த்தி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சங்கர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாணிக்கம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்