பெண்ணாடம் அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
பெண்ணாடம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே அரியராவி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் 190 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். கடந்த 2 மாத காலமாக பொதுமக்களுக்கு சரியான முறையில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இது குறித்து கடை ஊழியர்களிடம் பொதுமக்கள் கேட்டபோது அவர்கள், பிறகு தருவாக கூறிவந்துள்ளனர். இந்த நிலையில் பொருட்கள் வாங்காத பலரின் செல்போன் எண்ணுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல் வந்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சென்று ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் தவறுதலாக குறுந்தகவல் வந்துவிட்டது. இனி இதுபோல் நடக்காது என்று கூறியுள்ளார். தொடர்ந்து பொதுமக்களுக்கு முறையாக அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இருப்பினும் பிரச்சினைக்கு காரணமான விற்பனையாளரை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.