விழுப்புரம் பகுதியில் மழை ஓய்ந்தும் வெள்ளநீர் வடியாததால் பொதுமக்கள் பாதிப்பு
விழுப்புரம் பகுதியில் மழை ஓய்ந்தும் வெள்ளநீர் வடியாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல்களால் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தாழ்வான பகுதியில் வசித்த மக்கள், தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்களும் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளையும் கவலையடைய வைத்தது. கடந்த 7-ந் தேதிக்கு பிறகு மழை சற்று ஓய்ந்து வறண்ட வானிலை நீடித்ததால் அவ்வப்போது வெயிலும் சுட்டெரித்தது. இதனால் தாழ்வான பகுதியில் தேங்கியிருந்த வெள்ளநீர், மெல்ல, மெல்ல வடிய ஆரம்பித்தது. இதனால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள், வீடுகளுக்கு சென்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இதனிடையே தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மீண்டும் மழைநீர் சூழ்ந்தது. அதுபோல் கிராமப்புறங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் வீணாகியது.
மேலும் தொடர் மழையின் காரணமாக தென்பெண்ணையாறு, பம்பை ஆறு, மலட்டாறு, சங்கராபரணி, வராக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி 860-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறிச் செல்கிறது. அதுதவிர ஒரு சில ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை ஓய்ந்து 2 நாட்களாகியும் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த வெள்ளநீரும், விவசாய நிலங்களில் தேங்கியிருந்த வெள்ளநீரும் இன்னும் வடியவில்லை. குறிப்பாக ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அகரம்சித்தாமூர், பள்ளியந்தூர், மல்லிகைப்பட்டு, அரியலூர்திருக்கை, வன்னிப்பேர், டி.குன்னத்தூர், கொங்கராயனூர், திருவாமாத்தூர், பில்லூர் உள்ளிட்ட தரைப்பாலங்களில் கடந்த 2 நாட்களாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நேற்றும் 3-வது நாளாக தண்ணீர் ஓடியது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனேயே சாலையை கடந்து சென்றனர்.
மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.