கோத்தகிரி அருகே, காய்கறி பதப்படுத்தும் மையத்தில் தீ

கோத்தகிரி அருகே காய்கறி பதப்படுத்தும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2020-12-20 09:40 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே மசக்கல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காய்கறி பதப்படுத்தும் மையம் உள்ளது. இந்த காய்கறி பதப்படுத்தும் மையத்தில் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகள் மற்றும் உள்ளூர் மலைக்காய்கறிகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அதனை பதப்படுத்தி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் அந்த கட்டிடத்திற்குள் தீ பற்றி எரிந்தது. அதிலிருந்து கரும்புகை வெளியே வந்ததை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் முன்னணி தீயணைப்பு வீரர் மாதன் தலைமையில் மேகநாதன், ராஜா, பாலமுருகன், சரத்குமார் ஆகியோர் கொண்ட 5 பேர் குழுவினர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்தனர். பின்னர் அந்த கட்டிடத்திற்குள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கட்டிடத்திற்குள் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், குளிரூட்டும் மின்சார சாதனங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானதுடன் கட்டிடமும் சேதமடைந்தது. இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்