கும்பகோணத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம்,
கும்பகோணம் நகர பகுதியில் உள்ள சாலையோர தெரு வியாபாரிகளுக்கு, பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடனுதவி பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு பாஸ் புத்தகத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் புதிய பஸ் நிலையம், மகாமகக்குளம் மேல்கரை பகுதிகளை சேர்ந்த சாலையோர தெரு வியாபாரிகள் 150 பேர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக, விண்ணப்பம் அளித்தும் இதுவரை கடன் வழங்காமல் உள்ளது.
கடன் வழங்காமல் காலம் தாழத்தும் நகராட்சி மற்றும் வங்கி நிர்வாகங்களை கண்டித்தும், உடனே கடன் வழங்கக்கோரியும் நேற்று ஏ.ஐ.டி.யூ.சி. சாலையோர தெரு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர தெரு வியாபாரிகள் பேரணியாக வந்து நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மதியழகன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் மு.அ.பாரதி, சங்கத்தின் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சிவக்குமார், சாதிக்பாட்ஷா, ராதாகிருஷ்ணன் நாராயணன், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.