சாத்தான்குளம் அருகே கார் கவிழ்ந்து என்ஜினீயர் பலி; 3 பேர் படுகாயம்
சாத்தான்குளம் அருகே கார் கவிழ்ந்து என்ஜினீயர் பலியானார். அவருடைய நண்பர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
என்ஜினீயர்
குரும்பூர் அருகே வீரமாணிக்கத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவருடைய மகன் பால விக்னேஷ் (வயது 21). என்ஜினீயர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்கள், உறவினர்களுடன் சாத்தான்குளம் ஓடைக்கரை கோவில் கொடை விழாவுக்கு சென்றார்.
பின்னர் நேற்று அதிகாலையில் பால விக்னேஷ் தன்னுடைய நண்பர்களுடன் தனது ஊருக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தார். சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரம் ஆறுகண் பாலம் அருகில் சென்றபோது, காரின் பின்பக்க டயர் திடீரென்று வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
பலி
இந்த விபத்தில் காரில் இருந்த பால விக்னேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த அவருடைய நண்பர்களான வீரமாணிக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (21), பார்வதிமுத்து (21), ஜானகிராமன் (17) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீசார் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த கார்த்திக் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த பால விக்னேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.