கரூா் ஜவகர்பஜாரில் இருந்து பசுபதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் ஜவகர்பஜாரில் இருந்து கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை சுற்றி பல்வேறு தெருக்கள் இருக்கின்றன. இதில் கரூர் ஜவகர்பஜாரில் இருந்து கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலையில் வீடுகள், கடைகள் உள்ளன. அதேபோல் ஜவகர்பஜாரில் கடைகள், ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த சாலையை சுற்றியுள்ள வீடுகள், கடைகள் ஓட்டல்களில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகள் இந்த சாலையில் கொட்டப்பட்டு வருகிறது. இதில் பிளாஸ்டிக் பைகள், வாழை இலைகள், சாக்குகள், பேப்பர் கப், தேங்காய் ஓடுகள், பூக்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருட்கள் இங்கு கொட்டி கிடக்கின்றன.
துர்நாற்றம்
இந்த கழிவு பொருட்கள் நீண்ட நாட்களாக கொட்டி கிடப்பதால், குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலை வழியாக ஏராளமான பொதுமக்கள் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் இந்த சாலையில் குப்பைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால், இந்த சாலையில் செல்லும் அனைவரும் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த பகுதியில் அடிக்கடி இதேபோன்று குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. எனவே இந்த குப்பைகளை உடனடியாக அகற்றி, மீண்டும் இப்பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.