பண்டிகையையொட்டி கிறிஸ்துமஸ் `ஸ்டார்'கள் விற்பனை மும்முரம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் `ஸ்டார்'கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை,
ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளான டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகையாகும். இந்த பண்டிகையையொட்டி வீடுகளில் கிறிஸ்துமஸ் `ஸ்டார்'கள் எனப்படும் நட்சத்திர மின் விளக்குகளால் அலங்கரித்தும், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில் அமைத்து அலங்கரித்தும் வைப்பது உண்டு.
மேலும் தேவாலயங்களிலும் மின் விளக்குகளால் ஜொலிக்கும். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணித்தவர்கள் இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கி குதுகலப்படுத்துவார்கள். ஏசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் 24-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். மேலும் 25-ந் தேதி காலையிலும் பிரார்த்தனை நடைபெறும். இதில் கிறிஸ்துவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். மேலும் பண்டிகை வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, கேக் மற்றும் இனிப்புகளை வழங்குவது வழக்கம்.
விற்பனை மும்முரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கிறிஸ்தவர்கள் தயாராகி வருகின்றனர். இதையொட்டி கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை புதுக்கோட்டையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா உடை, பொம்மைகள் மற்றும் அலங்கார மின் விளக்குகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்கார பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்து வருவது உண்டு. அவை தற்போது அதிகம் வரவில்லை. கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் பெரும்பாலும் கேரளாவில் தயாராகி விற்பனைக்கு வருகிறது. இதன் விலைகள் அளவுக்கு தகுந்தாற்போல வேறுபடும். இந்த ஆண்டு கொரோனா காலக்கட்டம் என்பதால் கடந்த ஆண்டை விட வியாபாரம் சற்று குறைந்துள்ளது. வியாபாரிகளும் பெரிய அளவில் கொள்முதல் செய்யவில்லை" என்றனர்.