விசுவக்குடி அணையில் இருந்து பாசனத்திற்காக 150 கன அடி தண்ணீர் திறப்பு கலெக்டரை விவசாயிகள்- பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

விசுவக்குடி அணையில் இருந்து பாசனத்திற்காக 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டரை விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-12-20 00:01 GMT
வேப்பந்தட்டை, 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடியில் கல்லாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அணையின் மொத்த கொள்ளளவான 33 அடியில் தற்போது 30 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து விசுவக்குடி, தொண்டமாந்துறை, வெங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறையினர் முடிவு செய்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதில் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) சிவப்பிரகாசம், (கிழக்கு) ரவிச்சந்திரன், அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மருதாம்பாள் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு தண்ணீரில் மலர் தூவினார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் நல்லுசாமி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கலெக்டரை முற்றுகை

இந்நிலையில் அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், அன்னமங்கலம் ஊராட்சியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரிக்கு கடந்த காலத்தில் கல்லாற்றில் இருந்து தண்ணீர் வரத்து வாய்க்கால் உள்ளது. தற்போது இந்த வரத்து வாய்க்கால் தூர் வாரப்படாமல் தூர்ந்து போய் உள்ளது. எனவே வரத்து வாய்க்காலை சீரமைத்து அன்னமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும், என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேசிய கலெக்டர், ஏற்கனவே வரத்து வாய்க்கால் இருந்ததற்கான ஆதாரங்களை ஆய்வு செய்து தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும், என்று உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்