தேனி மாவட்டத்தில் 4 ஆயிரம் சலூன் கடைகள் அடைப்பு - முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் 4 ஆயிரம் சலூன் கடைகளை அடைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள உலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. முடி திருத்தும் தொழிலாளி. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர் அதே ஊரை சேர்ந்த ஒரு சமூகத்தினருக்கு முடிதிருத்தம் செய்தார். இதனால், அதே ஊரை சேர்ந்த ஒரு தரப்பினர், ராஜா மற்றும் அவருடைய குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து இந்த சம்பவத்தை கண்டித்தும், இதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தில் சலூன் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டன.
மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் ராமதாஸ், மாநில துணைத்தலைவர் பாலச்சந்தர், மாவட்ட செயலாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் மனோகரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், தேசிய தலித் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் முத்து முருகேசன் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க காரணமான நபர்கள் மீதும், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட பொருளாளர் திருமலை, தேனி நகர தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.