பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர், தாய்- தந்தையுடன் கைது - 3 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்டனர்
திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர், தாய்- தந்தையுடன் 3 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை ேசர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் கவிதா(வயது15).(பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன). கவிதா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது கவிதா திருப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம் சாலமேடு கிராமத்தை் சேர்ந்த செல்வத்துக்கும்(22) கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் கவிதா தனது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு வந்தார். 1 மாதத்துக்கு பின்பு திருத்துறைப்பூண்டிக்கு வந்த செல்வம், பள்ளியில் இருந்து கவிதாவை திருப்பூருக்கு அழைத்து சென்று தனது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து கவிதா கர்ப்பமடைந்தார். இந்தநிலையில் கவிதாவுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனைக்கு செல்வம் அழைத்து சென்றார். அப்போது கவிதாவுக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் செல்வம் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி கவிதா தனது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு வந்து தனது பெற்றோரிடம் தஞ்சம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து கவிதாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது கவிதாவின் கர்ப்பப்பை எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து செல்வம் மீதும் அவரது தாய்- தந்தை மீதும் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம் மற்றும் அவரது தாய் தந்தையை போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜனநாயக மாதர் சங்கத்தினர் அறிவி்த்தனர். இதைத்தொடர்ந்து
திருத்துறைப்பூண்டி போலீசார் திருவண்ணாமலை அருகே உள்ள சாலை மேடு கிராமத்தில் இருந்த செல்வம் மற்றும் அவரது தந்தை முனியாண்டி, தாய் சுசிலா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர், தனது தாய்- தந்தையுடன் 3 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.