குத்தாலம் அருகே ராகவேந்திரா ஆசிரமத்தில் 2 வெண்கல சிலைகள் திருட்டு - மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு
குத்தாலம் அருகே ராகவேந்திரா ஆசிரமத்தில் 2 வெண்கல சிலைகளை மர்ம மனிதர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை திருடிச்சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
குத்தாலம்,
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தை அடுத்த சிவராமபுரம் அக்ரஹாரத்தில் ராகவேந்திரா ஆசிரமம் உள்ளது. கடந்த 16-ந் தேதி இரவு ஆசிரமத்தில் பணிகளை முடித்து விட்டு ஆசிரம காப்பாளர் மணி வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் 17-ந் தேதி ஆசிரமத்திற்கு வந்தபோது கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது ஆசிரமத்தில் இருந்த 23 கிலோ எடை உள்ள இரண்டு வெண்கல சிலைகள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சென்னையில் உள்ள ஆசிரம உரிமையாளருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சென்னையில் இருந்து வந்த ஆசிரமத்தின் உரிமையாளர் ஹரிகணேஷ் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர். ஆசிரமத்தில் வெண்கல சிலைகள் திருட்டு போன சம்பவம் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.