வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் கடவூர் ஒன்றிய பகுதிகளில் நிரம்பாத ஏரி-குளங்கள் விவசாயிகள் கவலை
வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் கடவூர் ஒன்றிய பகுதிகளில் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தரகம்பட்டி,
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் கடவூர், தரகம்பட்டி, மாவத்தூர், பாலவிடுதி, முள்ளிப்பாடி, பண்ணப்பட்டி, வடகம்பாடி உள்ளிட்ட 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையே முக்கியத் தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்தபகுதியில் முள்ளிப்பாடி ஏரி, மாவத்தூர் ஏரி, தரகம்பட்டி சுந்தரபாண்டியன் ஏரி, பண்ணப்பட்டி ஏரி உள்ளிட்ட ஏரிகள் உள்ளன. மேலும் 60-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய குளங்கள் உள்ளன. இந்தப் பகுதி வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. இந்தப் பகுதியில் கோடைக காலங்களில் பெய்யக்கூடிய தென்மேற்கு பருவ மழையைக் கொண்டு மானாவாரி நிலங்களில் சோளம் துவரை எல் போன்ற பயிர்களை பயிரிடுவார்கள்.
இதனையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு பெய்யக்கூடிய மழையில் ஏரி குளங்கள் நிரம்பும். இதனைக் கருத்தில் கொண்டு நெல், மிளகாய் போன்றவற்றை விவசாயிகள் பயிர் செய்து வருவார்கள். கடந்த ஆண்டு பெய்த மழையினை வைத்து ஏரி, குளங்கள் பாதி அளவு நிரம்பியது. இதனால் ஓர் அளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆங்காங்கு சிறிய அளவில் விவசாயம் செய்து வந்தனர். இருப்பினும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இன்று வரை ஏரி, குளங்கள் நிரம்பும் அளவிற்கு மழை பொழியவில்லை.
தினசரி சிறிய தூறல் மழை மட்டுமே பெய்து வந்தது இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வந்தது. பயன்தரக் கூடிய அளவிற்கு மழை பெய்யவில்லை. எனவே வடகிழக்கு பருவமழை முடியும் நிலையில் உள்ளது இனி வரும் நாட்களிலாவது அதிக மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்புமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இந்தப் பகுதி விவசாயிகள்.