மராட்டியத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன - கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன

மராட்டியத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

Update: 2020-12-19 13:39 GMT
புதுக்கோட்டை,

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருக்கிறது. இதனை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இறந்தவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணியில் ஈடுபட தொடங்கி விட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டார். நடிகர் ரஜினிகாந்த்தும் விரைவில் கட்சி தொடங்க இருக்கிறார். இதனால், தமிழக அரசியல் களம் இப்ேபாதே சூடு பிடிக்க தொடங்கி வி்ட்டது.

இந்தநிலையில், சட்டசபை பொது தேர்தலுக்காக மராட்டியத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கன்டெய்னர் லாரியில் வந்தன. மேலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து ெகாள்ளும் கருவிகளும் வந்துள்ளன.

பின்னர் அவைகள், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அகதிகள் நல தனிவட்டாட்சியர் தமிழ்மணி மற்றும் டாஸ்மாக் உதவி மேலாளர் கேப்ரியேல் சார்லஸ் ஆகியோர் மராட்டியத்துக்கு சென்று வாக்கு எந்திரங்களை புதுக்கோட்டைக்கு கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்