தர்மபுரி மாவட்டத்தில் ரூ.173 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்; கட்டுமான பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தர்மபுரி மாவட்டத்தில் ரூ.173 கோடி மதிப்பில் 2,116 வீடுகள் கொண்ட 4 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுமான பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

Update: 2020-12-19 04:47 GMT
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணியை அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தபோது
அடுக்குமாடி குடியிருப்புகள்
தர்மபுரி மாவட்டத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், உதவி கலெக்டர் பிரதாப், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், ஒன்றியக்குழு தலைவர்கள் நீலாபுரம் செல்வம், பொன்மலர் பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கொண்டகரஅள்ளி, பீச்சான்கொட்டாய், நம்பிப்பட்டி ஆகிய இடங்களில் ரூ.172.94 கோடி மதிப்பீட்டில் 2,116 வீடுகளை கொண்ட 4 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கோழிமூக்கனூர் கிராமத்தில் ரூ.14.82 கோடி மதிப்பீட்டில் 168 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் தருவாயில் உள்ளது. பூனையனூர் கிராமத்தில் ரூ.15.66 கோடி மதிப்பீட்டில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒப்பந்ததாரர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பயன்பாட்டுக்கு வரும்
அதியமான்கோட்டை கிராமத்தில் ரூ.60.92 கோடி மதிப்பீட்டில் 608 அடுக்குமாடி குடியிருப்புகள், போடூர் பகுதியில் ரூ.26.65 கோடி மதிப்பீட்டில் 272 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. முக்குளம் கிராமத்தில் ரூ.16.7 கோடி மதிப்பீட்டில் 156 அடுக்குமாடி குடியிருப்புகள், சின்னமொரசுப்பட்டி பகுதியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 204 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட கருத்துரு மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்த விழாவில் உதவி கலெக்டர் தணிகாசலம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் விஜயமோகன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவபிரகாசம், கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ஆறுமுகம், மகாலிங்கம், ரவீந்திரன், அரசு வக்கீல் பசுபதி, கூட்டுறவு சங்க தலைவர்கள் பழனிசாமி, ஆறுமுகம், மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்