கோட்ட அளவிலான குறைதீர்வு கூட்டம்: கிராம பகுதிகளுக்கு அனைத்து நாட்களும் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
வேலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம பகுதிகளுக்கு அனைத்து நாட்களும் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார்.
இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். மேலும் விவசாயிகள் கூறியதாவது:-
அணைக்கட்டு அருகே உள்ள பூதூர் ஏரி, ஆண்டேரி ஏரி, இலவம்பாடி ஏரி ஆகியவற்றுக்கு நீர்வரத்து இல்லை. அந்த ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏரிகளுக்கு..
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளில் 5 அடிக்கு ஆழப்படுத்த வேண்டும். அந்தளவுக்கு ஆழப்படுத்தினால் மட்டுமே கூடுதலாக தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
வேலூர் மாவட்டத்தில் கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் விடுமுறை நாட்களில் இயக்கப்படுவதில்லை. அனைத்து நாட்களிலும் கிராம பகுதிக்கு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருங்காலி அருகே உள்ள அக்ராவரம் பகுதியில் சுடுகாட்டை ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு எடுக்கப்பட்ட
நடவடிக்கை குறித்து அவர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதுப்பேரி ஏரிக்கு மோர்தானா, பாலாற்றில் இருந்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியிடைய விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.