நெல்லையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரம்

நெல்லையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2020-12-18 23:43 GMT
நெல்லை, 

கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக உள்ளது. கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் ஸ்டார்களை தொங்க விடுவதற்கும், குடில் அமைப்பதற்கும், வீடுகளை அலங்கரிப்பதற்குமான அலங்கார பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகிறார்கள். வீடுகளில் ஸ்டார் அலங்கார விளக்கு போடப்படுகிறது. இந்த ஸ்டார் ரூ.100 முதல் ரூ.1,000 வரை விதவிதமாக விற்பனை செய்யப்படுகிறது.

ெல்லையில், பாளையங்கோட்டை, சமாதானபுரம், வண்ணார்பேட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளிலும் ஸ்டார் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இரவு நேரங்களில் ஜொலிப்பதை பார்த்து செல்வதற்கு கூடுதலாக மக்கள் கூட்டம் வந்து செல்கிறது. கடைகளில் ஸ்டார் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டையை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:- எல்.இ.டி. விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சத்தை தரும் இந்த ஸ்டார்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு துணிகளால் செய்யப்பட்ட புதிய வடிவிலான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. இவை அனைத்தும் மழையால் சேதம் அடையாத வகையில், பூச்சிகள் உள்ளே புகாதபடி செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக விற்கப்படும் ஸ்டார் ரூ.50 முதல் ரூ.500 வரை விற்கப்படும். அவற்றில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தி விற்கப்படும் ஸ்டார்களின் விலை ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், மணி, பிளாஸ்டிக் மற்றும் காகித அலங்கார பூக்கள் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை குடும்பம், குடும்பமாக வந்து பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். கொரோனாவால் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் தற்போது தொற்று குறைவால் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக நாங்களும் வெளிமாவட்டங்களில் இருந்து விதவிதமான கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை இறக்குமதி செய்துள்ளோம். அவற்றை பொதுமக்கள் வந்து வாங்கிச் செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்

மேலும் நெல்லை மாநகரில் குறிப்பாக பாளையங்கோட்டை, நெல்லை டவுன் பகுதிகளில் பல்வேறு தெருக்களில் கிறிஸ்துமஸ் தாத்தா வலம் வர தொடங்கி உள்ளனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு வசனங்களை கூறி வருகின்றனர்.

இதுதவிர பாளையங்கோட்டையில் பெரும்பாலான வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வைப்பதற்காக விதவிதமான பொம்மைகள் விற்பனை ஆகிறது. ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது வீட்டின் முன்பு கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து அவற்றில் மினுமினுக்கும் கலர் விளக்குகளை தொங்க விட்டுள்ளனர். இதுதவிர மாட்டுத்தொழுவத்தில் கிறிஸ்து பிறந்ததை விளக்கும் பொருட்டு பெரும்பாலான கிறிஸ்தவர்களும் தங்களது கிறிஸ்துமஸ் குடிலில் மாட்டு தொழுவம் அமைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்