பாகிஸ்தானுடன் நடந்த 1971-ம் ஆண்டு போரில் வென்று தேசத்தை கட்டமைத்தது காங்கிரஸ் பா.ஜனதா மீது சிவசேனா மறைமுக தாக்கு

பாகிஸ்தானுடன் 1971-ம் ஆண்டு போரில் வெற்றி பெற்று தேசத்தை கட்டமைத்தது காங்கிரஸ் என கூறியுள்ள சிவசேனா பா.ஜனதாவை மறைமுகமாக தாக்கியுள்ளது.

Update: 2020-12-18 22:44 GMT
மும்பை, 

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் வெற்றியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது டெல்லியில் போர் நினைவிடத்தில், பொன்விழா வெற்றி ஜோதியை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.

உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு போரில் வென்ற ஆயுதப்படைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:-

1971-ம் ஆண்டு யுத்தம் ஒரு பரபரப்பான மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்வு ஆகும். இது பாகிஸ்தானை வென்ற போர் நினைவு பொன்விழா ஆண்டு மட்டும் அல்ல, இந்திரா காந்தியின் ராஜதந்திரத்தையும் நினைவில் கொள்ளவேண்டிய தருணமாகும்.

அமெரிக்க கடற்படை உதவி செய்ய வந்து சேருவதற்கு முன்பே பாகிஸ்தானை வீழ்த்தி மண்ணை கவ்வ செய்த அவரின் போர் தந்திரங்களை நினைவு கொள்வதற்கான நேரம்.

இந்திய ராணுவம் பாகிஸ்தானை 13 நாட்களில் சரணடைய செய்தது. 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது என வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தில் கேட்கப்பட்டு வருவது குழந்தைத்தனமான கேள்வி. அவர்கள் 1971 -ம் ஆண்டு போரின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்று பாடங்கள் கற்பிக்கப்பட்டபோதும், பாகிஸ்தான் அதை கற்றுக்கொள்ள மறுக்கிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இன்று ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது, ஆனால் அங்கு இதுவரை அமைதி திரும்பவில்லை.

2020-ம் ஆண்டில் மட்டும், சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் 4,052 முறை பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறியுள்ளது. காங்கிரஸ் என்ன செய்துள்ளது என்று கேட்பதற்கு பதிலாக, லடாக்கில் சீன ஊடுருவல் மற்றும் பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறல்களை நிறுத்த என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து பார்ப்பது நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்