காட்டுமன்னார்கோவில் அருகே, பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு - மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
காட்டுமன்னார்கோவில் அருகே பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜேந்திரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). காட்டுமன்னார்கோவில் மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தீபா (32) நேற்று முன்தினம் அதிகாலையில் அவருடைய வீட்டின் பின்பக்க தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி மறைந்திருந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென தீபாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சரவணன் காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தீபா தினந்தோறும் அதிகாலை வீட்டின் பின்புற தோட்டத்துக்கு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நேற்று முன்தினம் அதிகாலை தோட்டத்தில் பதுங்கி இருந்து தீபாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.