பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் உடைந்ததால் 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு - மேலும் 9 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின
விழுப்புரம் அருகே பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் உடைந்து 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் 9 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் விழுப்புரம் பகுதியில் உள்ள பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காணை- கெடாருக்கு இடையே அகரம்சித்தாமூரில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இருந்து தரைப்பாலத்திற்கு மேல் 2 அடிக்கு தண்ணீர் சென்றது. நேற்று காலையில் இருந்தும் நேரம் செல்ல, செல்ல ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகளவில் சீறிப்பாய்ந்து சென்றது. தொடர்ந்து, பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் திடீரென அந்த தரைப்பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு பாலம் உடைந்து சேதமடைந்தது.
இதனால் அகரம்சித்தாமூர், வாழப்பட்டு, கெடார், செல்லங்குப்பம், சூரப்பட்டு உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் விழுப்புரம் வருவதற்கான பிரதான சாலையாக உள்ள இந்த சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கண்ட கிராம மக்கள், திருவண்ணாமலை சாலை சென்று சுமார் 12 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு விழுப்புரம் வந்து செல்கின்றனர். மேலும் தரைப்பாலம் உடைந்தது தெரியாத அளவிற்கு மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் பம்பை ஆற்று வெள்ளத்தினால் பள்ளியந்தூரில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் பொன்னங்குப்பம், அரியலூர்திருக்கை, காங்கேயனூர் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கும், மல்லிகைப்பட்டில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் கோழிப்பட்டு, மாம்பழப்பட்டு உள்ளிட்ட 5 கிராமங்களுக்கும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அனுமந்தபுரம், அத்தியூர்திருக்கை, அடங்குணம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறிய உபரிநீரால் அருகில் உள்ள வயல்வெளிகள் நீரில் மூழ்கின. அதுமட்டுமின்றி அரியலூர்திருக்கையில் இருந்து பனமலைப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அனுமந்தபுரம், அத்தியூர்திருக்கை, போரூர், அடங்குணம், கொசப்பாளையம், திருக்குணம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரம்மதேசம் அருகே உள்ள வன்னிப்பேர், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குன்னத்தூர், கொங்கராயனூர், கஞ்சனூர் அருகே முட்டத்தூர், அரகண்டநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடியும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதிகளிலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேல்மலையனூர்- செஞ்சி செல்லும் சாலையில் மேலச்சேரி அருகில் உள்ள வராகநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடியும் தண்ணீர் செல்கிறது. இருப்பினும் குறைந்த அளவு தண்ணீர் ஓடுவதால் வாகனங்கள் சீராக வேகத்தில் சென்று வருகின்றன. மேலும் இந்த தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி செல்லும் தண்ணீரில் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் கடந்து சென்று வருகின்றனர். அதுபோல் சிறுவர்கள், இளைஞர்கள் அந்த தண்ணீரில் மகிழ்ச்சியோடு நீராடுவதையொட்டி போலீசார் அங்கு சென்று ஆபத்து கருதி அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.