பந்தலூர் அருகே தந்தை-மகனை கொன்ற காட்டு யானை கேரளாவுக்கு சென்றது - மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
பந்தலூர் அருகே தந்தை-மகனை கொன்ற காட்டு யானை கேரளாவுக்கு சென்றது. எனவே அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1 பகுதியில் தந்தை-மகனை கொன்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்த பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த யானையை வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அது சேரம்பாடி அருகே சப்பந்தோடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் நின்றது. உடனே அந்த காட்டு யானைக்கு வனத்துறை கால்நடை டாக்டர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தினார். உடனே அங்கு நின்ற காட்டு யானை சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த நிலையில் அங்கிருந்து சென்றது.
இதையடுத்து வனத்துறையினர் கும்கி யானைகளான கலீம், வீசீம், விஜய், பொம்மன் ஆகியவற்றின் உதவியுடனும், ஆளில்லா குட்டி விமானம் மூலமும் அந்த யானையை தேடினார்கள். அப்போது அது யானைகளின் கூட்டத்துடன் சேர்ந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கண்காணித்தபோது அந்த யானை திடீரென்று புதருக்குள் நுழைந்தது. இரவு ஆகிவிட்டதால் அதை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ள வில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் கூடலூர் உதவி வனபாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் வனச்சரகர்கள் சின்னதம்பி, மனோகரன், கணேசன் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த யானை சப்பத்தோடு பகுதியில் காட்டு யானைகளின் கூட்டத்துடன் நின்றது.
உடனே வனத்துறையினர் அந்த காட்டு யானையை தனியாக பிரிப்பதற்காக பட்டாசுகளை வெடித்தும், கும்கி யானைகளை வைத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த காட்டு யானைகளின் கூட்டம் வனப்பகுதிக்குள் பிரிந்து ஓடியது. தொடர்ந்து வனத்துறையினர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணித்தனர். ஆனால் அந்த காட்டு யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் தலைமையில் கூடலூர் மாவட்ட வன அதிகாரி குருசாமி மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அத்துடன் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் அந்த காட்டு யானை கோரஞ்சால் புஞ்சை கொல்லி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மறைந்து நிற்கிறதா என்பதையும் கண்காணிக்க வனத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அந்த யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் கும்கி யானைகள் மூலமும் அந்த காட்டு யானை இருக்கும் இடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தந்தை-மகனை கொன்ற காட்டு யானை கோத்தமலை, சாமியார் மலை பகுதி வழியாக கேரளாவுக்கு தப்பி சென்று இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். யானையை கண்டுபிடித்ததும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என்றனர்.