மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
திருப்பூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநிலக்குழு கூட்டம் கடந்த 15-ந் தேதி திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தொடங்கியது. நேற்றுடன் கூட்டம் நிறைவடைந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநில செயலாளர் முத்தரசன், மாநில துணை செயலாளர்கள் சுப்பராயன் எம்.பி., வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், மாநில பொருளாளர் ஆறுமுகம் மற்றும் மாநில நிர்வாகக்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசியல் நிலைபாடு உள்ளிட்டவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் வகுப்புவாத கட்சியான பா.ஜனதா கட்சி, பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வாக்குகளை பிரித்து, தன்னை பலப்படுத்திக்கொள்வதற்கு உரிய வஞ்சம் நிறைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளை தோற்கடிப்பதற்கு தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை பலப்படுத்தி வெற்றி பெறச்செய்வது என்று மாநிலக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு பாராட்டு, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றியுள்ள சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார திருத்த மசோதாவையும் திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. எனவே அந்த சட்டத்தை நிராகரிப்பதுடன் இந்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
144 தடை உத்தரவு
லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது என்பதால் அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அனைத்து தரப்புமக்களும் ஆதரவு தர வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான உணவுப்பொருட்களை வழங்க வேண்டும். மத்திய அரசு கடந்த 15 நாட்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.100 உயர்த்தி இருப்பதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு வரும் வார இதழ்கள், மாத இதழ்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை அறிவுபூர்வமாக வளர்ப்பது தடைப்படும். இது தவிர்க்கப்பட வேண்டும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஏராளமான பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் 144 தடை உத்தரவையும் நீக்க வேண்டும். மேலும் சுகாதாரதுறையில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். சட்டமன்றத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அந்த துறை அமைச்சர் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விபத்துக்குள்ளாகும் கொள்கை
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
தர்மபுரியில் பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்க சென்ற எம்.பி.யை சிலர் தடுத்து நிறுத்துவது என்பது ஜனநாயக விரோத செயல். இப்படிப்பட்ட அநாகரிகமான அரசியல் தமிழகத்துக்கு பொருந்தாது. இது தவிர்க்கப்பட வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி. அவருக்கு ஏற்பட்ட அரசியல் நிர்ப்பந்தம், நெருக்கடி காரணமாக மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்க்க முடியாமல் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி உள்ளார். தமிழக விவசாயிகள் போராட வில்லை. தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் தூண்டி விடுகிறது என்று அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தில் 100 சதவீதம் நடைபெற்றது என்பதை முதல்-அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் புதிதாக கட்சியை தொடங்குவதற்கான அரசியல் தேவை தற்போது எழவில்லை. அப்படிப்பட்ட சூழலில் ஒருவர் கட்சி தொடங்கப்போவதாக அறிவிக்கிறார். உலகம் தழுவிய முறையில் இடதுசாரி, வலதுசாரி என்ற இரு கொள்கைகள் உள்ளது. மூன்றாவதாக ஒரு கொள்கை இருக்க முடியாது. நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகர். அவர் நான் இடதும் அல்ல, வலதும் அல்ல. மையம் என்று கூறுகிறார். சாலையில் இடதுபுறமாக செல்வது பாதுகாப்பானது. தவிர்க்க முடியாத நேரத்தில் வலதுபுறம் செல்லலாம். மத்தியில் சென்றால் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். விபத்துக்கு உள்ளாகும் கொள்கையை கமல்ஹாசன் பின்பற்றுகிறார். மற்றொருவர் அரசியலுக்கு வருவதாக சொல்லி இருக்கிறார். அவர் வந்து கொள்கைகள் குறித்து சொன்ன பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.