வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கருங்கலில் நாளை ஏர்கலப்பை பேரணி
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கருங்கலில் நாளை(சனிக்கிழமை) ஏர்கலப்பை பேரணி நடைபெறும் என்றும், இதில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார்.
கருங்கல்,
பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து ராகுல்காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, பலகட்ட போராட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாய விரோத சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் சத்யாகிரக அறவழி போராட்டம், உண்ணாவிரத போராட்டம், மாபெரும் கையெழுத்து இயக்கம், பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை பேரணி போராட்டத்தை நடத்தி வருகிறது.
ஏர்கலப்பை பேரணி
அதன்படி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு உள்பட்ட கிள்ளியூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கருங்கல் ராஜீவ் ஜங்சன் முதல் பாலப்பள்ளம் ஜங்சன் வரை என் (ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.) தலைமையில் ஏர் கலப்பை பேரணி நடைபெறுகிறது.
இந்த பேரணியில் வட்டார தலைவர்கள் டென்னிஸ், பால்ராஜ், கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். ஆகவே பெருந்திரளாக கலந்து கொண்டு ஏர் கலப்பை பேரணியை வெற்றி பெற செய்ய கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.