ரஜினி, கமல்ஹாசனால் எந்த மாற்றமும் வராது தஞ்சையில், சீமான் பேட்டி

ரஜினி, கமல்ஹாசனால் எந்த மாற்றமும் வராது என தஞ்சையில் சீமான் கூறினார்.

Update: 2020-12-18 04:18 GMT
தஞ்சாவூர், 

ரஜினி, கமல்ஹாசன் இணைந்தால் வியப்பு எதுவும் இல்லை. ஏற்கனவே அவர்கள் நண்பர்கள். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதுபோல இது ஒரு அரசியல் படம். இதில் பெரிய வியப்பு ஒன்றுமில்லை. ரஜினி, கமல்ஹாசனால் எந்த மாற்றமும் வராது. இவர்களால் மற்ற கட்சிகளின் செல்வாக்கு ஒன்றும் சரியாது.

அவரவருக்கு உள்ள வாக்கு வங்கியை யாரும் பிரிக்க முடியாது. புதிய வாக்காளர்களில் மாற்றத்தை விரும்பி வரும் இளைய தலைமுறையினர், தங்களது வாக்குகளை யாருக்கு செலுத்துகின்றனர் என்பதில் தான் இருக்கிறது. எந்த கட்சியுடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காது. நாங்கள் ஏற்கனவே தெளிவான முடிவு எடுத்து, வேட்பாளரை அறிவித்து வேலையை செய்து வருகிறோம். எங்களிடம் பொருளாதார பலம் இல்லாததால் மக்களை சந்தித்து எங்கள் கொள்கைகளை விளக்கி கூறி வருகிறோம்.

மக்களின் பிரச்சினை

மத்திய அரசு எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது போலவே விவசாயிகளின் போராட்டத்தையும் கண்டு கொள்ளவில்லை. மிக அத்தியாவசியமான உயிர் தேவையாக இருக்கக்கூடிய வேளாண் சந்தையை பெரு முதலாளிகளுக்கு கொடுக்க மத்திய அரசு நினைக்கிறது. வேளாண் சட்டங்களை இதுவரை பிரதமர் விளக்கி பேசவில்லை. இந்த சட்டத்தில் என்னென்ன நன்மை வரும் என கூறவில்லை.

இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய குடிமக்களின் பிரச்சினையாகும். இது சரியான சட்டம் என்றால் விவசாயிகள், பல்வேறு கட்சியினர் எதற்காக போராட வேண்டும். அப்படியென்றால் போராடுபவர்கள் முட்டாள்களா?. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களில் ஒரு சதவீதம் கூட நன்மை கிடையாது.

ராஜராஜசோழனுக்கு நினைவிடம்

வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறுவது தவறானது. சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை 100 சதவீத மக்கள் எதிர்க்கிறார்கள். மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு, வேளாண் பாதுகாப்பு மண்டலம், 7 பேர் விடுதலை தொடர்பாக எடுத்த முடிவு போன்ற தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

அதற்காக ஒட்டுமொத்தத்தையும் கூற முடியாது. வெள்ளைக்காரர்களின் நினைவிடம் கூட இந்த அரசால் பராமரிக்கப்படுகிறது. ஆனால் ராஜராஜ சோழனின் நினைவிடத்தை யாரும் கண்டுகொள்வதில்லை. பெரியகோவில் தலைவாசல் வழியாக செல்வதற்கு ஆட்சியாளர்கள் அச்சப்படுகின்றனர். நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் ராஜராஜ சோழனுக்கு நினைவிடம் கட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்