வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் குடைபிடித்தபடி ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் குடைபிடித்தபடி ஆர்ப்பாட்டம் மக்கள் நீதி மய்யம்-தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் பங்கேற்பு.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட மக்கள் நீதி மய்யம் மற்றும் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநில பொதுச்செயலாளர் பொய்யாமணி தலைமை தாங்கினார். மக்கள் நீதி மய்ய மாநகர செயலாளர்கள் சுந்தரமோகன், செந்தில்குமார், தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க நகர தலைவர் புதுமை ராஜ், மாநகர செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை வக்கீல் முத்துமாரியப்பன் தொடங்கி வைத்தார். தஞ்சை மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க நிறுவன தலைவர் ரவிச்சந்திரன், கமல் நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் தரும சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். புயல் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குடைபிடித்தவாறு கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்ய இளைஞரணி செயலாளர் பிரகதீஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் கலையரசன், நிர்வாகிகள் கமல் முருகேசன், முருகன், மகளிரணி ரேணுகா, தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநில நிர்வாகி மனோகரன், மாவட்ட தலைவர் அய்யாவு, மாவட்ட நிர்வாகிகள் நாவலன், நீலகண்டன், ஜெயந்தி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் விஜய் நன்றி கூறினார்.