சிங்கம்புணரியில், தொடர் மழையால் உழுத வயல் போல மாறிய தற்காலிக சந்தை

சிங்கம்புணரியில் தொடர் மழை காரணமாக தற்காலிக சந்தை சேறும், சகதியாக உழுத வயல் போல காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தார்கள்.

Update: 2020-12-18 02:42 GMT
சிங்கம்புணரியில் தொடர் மழையால் தற்காலிக சந்தை சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
வேறு இடத்துக்கு மாற்றம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் சிங்கம்புணரி பகுதியை சுற்றிலும் உள்ள40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும் தங்கள் தோட்டத்தில் விளையும் விளைபொருட்களை விற்பனை செய்கிறார்கள்.

சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகே பல ஆண்டுகளாக வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. சமீபத்தில் பெய்த மழையால் அந்த வாரச்சந்தை சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் சந்தைக்கு வந்த வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சித்தர் முத்துவடுகநாதர் சாமி கோவில் அருகில் தனியார் இடத்தில் தற்காலிகமாக சந்தை அமைக்க இடம் ஒதுக்கியது. அதன்படி நேற்று அங்கு வாரச்சந்தை நடைபெற்றது.

உழத வயல் போல...
கடந்த 2 நாட்களாக சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. தொடர் மழை காரணமாக சிங்கம்புணரியில் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட சந்ைதயும் சேறும், சகதியுமாக உழத வயல் போல அவை காணப்பட்டது.

சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வந்த வியாபாரிகள் சகதியின் மேலே சாக்கு பையை விரித்து அதன் மேல் காய்கறிகளை கொட்டி வியாபாரம் செய்து வந்தனர்.

பொதுமக்கள் கடும் அவதி
இந்த நிலையில், நேற்று சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். சேறும், சகதியுமாக காணப்பட்டதால் பலர் பொருட்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டி சந்தைக்கு வராமல் திரும்பி சென்றனர். ஒரு சிலர் சந்தையில் பொருட்கள் வாங்க சென்ற போது சேறும், சகதியுமாக காணப்பட்டதால் அதில் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். ஒரு சிலர் சேறும், சகதியில் நடந்த போது வழுக்கி விழுந்தனர். தற்காலிக சந்தையில் சிறு வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை என சிலர் புகார் தெரிவித்தனர். இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமதுவிடம் கேட்ட போது, வேங்கைப்பட்டி சாலை சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவில் அருகில் உள்ள பகுதியில் சுமார் 1 ஏக்கர் நிலத்தில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு உள்ளது. தொடர் மழையால் அங்கு சந்தை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சுகாதார வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்