திருச்சியிலிருந்து டெல்லி சென்று தினமும் ஒரு விவசாயி தற்கொலை செய்வோம் அய்யாக்கண்ணு பேட்டி
திருச்சியில் இருந்து டெல்லி சென்று தினமும் ஒரு விவசாயி தற்கொலை செய்வோம் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
திருச்சி,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக திருச்சியில் நேற்று மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி பழனிவேல், மாநில துணைத்தலைவர்கள் கிருஷ்ணன், சந்திரசேகர், கிட்டப்பா ரெட்டி, முருகேசன், செயலாளர் தஞ்சை முருகன் மற்றும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை விவசாயிகளிடம் வாசித்து காண்பித்த பின்னர், அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகள் ஏமாற்றம்
புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் 22 நாட்களுக்கும் மேலாக போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை மத்திய அரசு, இவர்கள் விவசாயிகள் அல்ல. புரோக்கர்கள் என்று அவதூறாக சித்தரிக்கிறது. விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுப்பதாக 1980-ல் இருந்து மத்தியில் ஆண்ட கட்சிகள் கூறி ஏமாற்றின.
2015-ம் ஆண்டு பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபம் தரும் விலையை கொடுப்பதாக கூறினார். அப்போது 1 கிலோ நெல் ரூ.14. ஆனால், கிலோவுக்கு ரூ.4.88 உயர்த்தி கொடுக்கப்பட்டது. இதுபோல கரும்பு டன்னுக்கு ரூ.2,500 கொடுத்ததை ரூ.250 மட்டுமே உயர்த்தி தரப்படுகிறது.
இருமடங்கு வருமானம் தருவதாக ஏமாற்றி, தற்போது மாநில அதிகாரத்தில் உள்ள விவசாயத்தை சட்ட விரோதமாக மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்து கொண்டு 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றி உள்ளது.
தினமும் ஒருவர் தற்கொலை
விவசாயிகளை கொச்சைப்படுத்துவதை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மூலமாக 30 விவசாயிகள் டெல்லி சென்று, தினமும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் அதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளோம். எனவே, நானும் விவசாயிதான் என்றும் கூறும் முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு பயந்து இளைஞர்களையும், விவசாயிகளையும் அழித்துவிடமாட்டார் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.